உங்களின் 60 வயதை ஒட்டிய பேட்டி என்பதால் உங்கள் ஊரைப் பற்றியும் – பெற்றோர் பற்றியும் படிப்பு முதலானதைப் பற்றியும் அறியலாமா?
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருவரம்பு. அதன் அருகில் தான் திற்பரப்பு அருவி உள்ளது. திருவரம்பில் மகாதேவர் கோயில் மையமானது. அதை ஒட்டிய தொன்மையான வீடுகளில் ஒன்று என்னுடையது. எங்கள் குடும்பம் முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ‘கணபதியம் வளாகம்’ என்பது வீட்டுப் பெயர். ‘வயக்க வீடு’ என்பது அப்பாவின் குடும்பப் பெயர்.
என் அப்பா பாகுலேயன் பிள்ளை பத்திரப்பதிவுத்துறை ஊழியராக இருந்தார். அம்மா விசாலாட்சி நல்ல இலக்கிய வாசகி.அவருடைய அண்ணன் ஒருவர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தார். ஆகவே அம்மா இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்று மொழிகளிலும் நிறைய வாசிப்பவர் .எனக்கு இலக்கிய அறிமுகம் அம்மாவிடமிருந்து தான். எங்கள் இல்லத்தில் நல்ல நூல் சேகரிப்பு இருந்தது. அம்மா என்னை ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். நான் இன்னொரு தொழிலையோ அடையாளத்தையோ கற்பனை செய்ததே இல்லை.
நான் வணிகவியல் இளங்கலை வரை படித்தேன். இறுதியாண்டு படிக்கும்போது என் நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டான். அது என்னை நிலைகுலையச் செய்தது. பல உளச்சிக்கல்களுக்கு ஆன்மிக நிலையழிவுக்கும் ஆளானேன். ஊரை விட்டு ஓடிப்போனமையால் படிப்பை முடிக்கவில்லை.
சிறுவயதில் துறவியாக ஆசைப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். அது உண்மையா ? காசி – திருவண்ணாமலை –பழனி என்று சுற்றியதெல்லாம் எந்த ஆண்டுகளில் ?
நான் எனது 18 வயதில் ஒரு முறையும் 19 வயதில் இன்னொரு முறையும் ஊரை விட்டு ஓடிப் போனேன். 1981 82 இல் துறவியாக அலைந்திருக்கிறேன். துறவி என்று சொல்ல முடியாது. அப்போது ஆழ்ந்த உளச்சிக்கல் இருந்தது. ஆகவே தனியாக அலைந்தேன். பெரும்பாலும் சாமியார்களுடன் இருந்தேன் என்று சொல்லலாம். திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், பழனி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். குறுகிய காலம். மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள்.
வேலைவாய்ப்பு–திருமணம் பற்றி கூறலாமா ? ரசிகையாகி – வாழ்க்கை துணைவர் ஆனவரை எப்போது சந்தித்தீர்கள்? முதலில் விருப்பத்தைத் தெரிவித்தவர் யார்? அந்த அனுபவம் ? அவரது ஊருக்குச் சென்றிருக்கிறீர்களா?
1984ஆம் ஆண்டு நவம்பரில் நான் காசர்கோடு (வடகேரளம்)தொலைபேசி நிலைய ஊழியனாக தற்காலிகப் பணியில் சேர்ந்தேன். அங்கே 1988 வரை பணியாற்றினேன். 1997 வரை தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பின்னர், நாகர்கோவில் வந்தேன். 2008 இல் தக்கலை தொலைபேசி நிலையத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். 2004 இல் திரைத்துறைக்குள் நுழைந்தேன். அது முதல் நீண்ட விடுப்பில்தான் இருந்தேன்.
நான் தருமபுரியில் பணியாற்றும் போது 1990 இல் என் முதல் நாவல் ‘ரப்பர்’ வெளிவந்தது. அகிலன் நினைவுப் பரிசு பெற்ற நாவல் அது. அந்த நாவலை வாசித்து விட்டு அப்போது மதுரை வேளாண் கல்லூரியில் மாணவியாக இருந்த அருண்மொழி நங்கை எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார். நவீன இலக்கியம் புரியாமல் அந்நியமாக இருப்பதைப் பற்றி எழுதியிருந்தார். நான் விரிவான பதில்கள் போட்டேன். பின்னர் நான் கேரளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது மதுரையில் வேளாண் கல்லூரிக்குச் சென்று அருண் மொழியைச் சந்தித்தேன். அந்த கடிதங்களில் இருந்த கூர்மையும் கூடவே இருந்த கள்ளமின்மையும்தான் நான் அவரை நோக்கிச் செல்ல காரணம். நேரில் சந்தித்தபோது பெரும் பிரியம் ஏற்பட்டது.
இலக்கிய ஆர்வம் கொண்ட அதேசமயம் சிறுமியைப் போல துறுதுறுப்பாக இருந்த அருண்மொழியை நான் மிக விரும்பினேன். என் காதலை தெரிவித்து கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துக்கு அவர் தந்தி அடித்து பதில் அளித்தார். தன் சம்மதத்தைக் கடிதம் வழியாக தெரிவித்தால் அது வந்து சேர நாலைந்து நாள்கள் ஆகுமே.
அதுவரை நான் தவிக்கக்கூடாது என அந்த தந்தியை அடித்திருந்தார். அவ்வாண்டே திருமணம் செய்து கொண்டோம். இப்போது அருண்மொழி அந்த நினைவுகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதி இருக்கிறார்.
நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி உள்ளிட்ட நிறைய குருமார்கள் மீது பிடித்தம் இருக்கிறதே ….? இவர்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள்? இவர்களைப் பற்றி அறிமுகம் என்ன?
நான் இளமையிலேயே சாவுகளைச் சந்தித்தவன். சாவு வாழ்க்கை மேல் அடிப்படையான கேள்விகளை உருவாக்கி விடுகிறது. அவை ஆன்மீகமான அலைக்கழிவை உருவாக்கின. எனது 28 வயதுக்குள் பல துறவிகளைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு வழிகாட்டவில்லை. அது அவர்களின் பிழை அல்ல. என் உலகம் இலக்கியம். ஆகவே இலக்கியம் வழியாகவே ஓர் ஆசிரியர் என்னிடம் பேச முடியும். இலக்கியம் நன்கறிந்த மெய்ஞானியாக நான் சந்தித்தவர் குரு. நித்ய சைதன்ய யதி. அவர் நடராஜகுருவின் மாணவர். நடராஜகுரு நாராயண குருவின் மாணவர். நடராஜகுரு மேலைத் தத்துவத்தில் சார்போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்ய சைதன்ய யதி தத்துவம், உளவியல் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். மாபெரும் இலக்கியவாதி. ஆகவே அவருக்கு நான் மாணவன் ஆனேன். அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன்.
தத்துவம் என்பது உரிய ஆசிரியர் அமையாமல் கற்றுக் கொள்ள முடியாத ஒரு துறை. ஆன்மிகம் என்பது ஆசிரியர் வழிகாட்டினாலொழிய உள்ளே செல்லவே முடியாத ஒரு களம். என் தத்துவ, ஆன்மிக தேடல்களால் நான் என் மெய்யாசிரியரைக் கண்டு கொண்டேன். இலக்கியவாதிக்கு தத்துவ அடித்தளம் இருந்தாக வேண்டும் .
தத்துவம் என்பது ஒரு பாடமாக நூல்கள் வழியாகக் கற்கத்தக்கது அல்ல. தத்துவப் படுத்தல் என்பது ஓர் அறிவுச் செயல்பாடு. அதை ஆசிரியர்தான் கற்பிக்க முடியும். எதையும் தத்துவார்த்தமாக அணுக நித்ய சைதன்ய யதியிடமிருந்து கற்றேன். தத்துவார்த்த அணுகுமுறை என்பது எந்த விஷயமானாலும் அதன் சாராம்சம் என்ன ஒட்டுமொத்தம் என்ன என்று பார்ப்பது. அதைக் கற்பித்தவர் நித்யா தான்.
எழுத்து என்று வரும்போது உங்களது சிந்தனைப் போக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்தது ?
நான் எழுத ஆரம்பித்தது மிக இளமையில். பள்ளி நாட்களிலேயே சிறுவர் இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன். கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு பெயர்களில் வார இதழ்களில் கதைகள் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் எழுதுவது நின்றது. பின்னர் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்த போது மீண்டும் எழுதலானேன். 1986 இல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவ்வாண்டே மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா அறிமுகமானார்.
இருவரும் என்னை இலக்கியத்தில் வழி நடத்தினர். சிற்றிழ்களில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். 1987 இல் கணையாழியில் ‘நதி’ என்னும் சிறுகதையும் தீபம் இதழில் ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. கொல்லிப் பாவை இதழில் ‘கைதிகள்’ என்னும் கவிதை வெளிவந்தது. இவைதான் என் தொடக்க கால எழுத்துகள்.
என் இலக்கியப் பார்வை சுந்தர ராமசாமியும் ஆத்தூர் ரவிவர்மாவும் வடிவமைத்தது. ஓர் இலக்கியவாதி எந்த அரசியலியக்கத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த சிந்தனை முறைக்கும் முழுமையாக தன்னை அளித்துவிடக்கூடாது என்பதே என் முதல் நிலைப்பாடு.
இலக்கியவாதி முழுக்க முழுக்க தர்க்கபூர்வமாக, நடைமுறைத் தன்மையுடன் பேச வேண்டியதில்லை. அவன் உள்ளத்துக்கு தோன்றியதை எழுதவும் பேசவும் வேண்டும். அதில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம். சில விஷயங்கள் சமூகத்தால் ஏற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அவன் தன்னியல்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவன் எதற்காகவும் தன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. எதற்கும் அஞ்சவும் கூடாது. என் இலக்கிய கொள்கை என்பது இதுதான்.
என் கதைகள் எல்லாமே தன்னியல்பாக வெளிவருபவை. எந்தத் திட்டமும் இருக்காது.
பெரும்பாலான சமயங்களில் ஒரு சின்ன காட்சி மட்டும் மனதில் தோன்றும். சில சமயம் வெறுமே முதல் வரி மட்டும் மனதில் எழும். உடனே எழுத ஆரம்பித்து விடுவேன். ஆனால் நாவல்கள் அப்படி அல்ல. தெளிவான திட்டமிடல் அவற்றில் இருக்கும். நாவலின் கரு என்பது ஓர் அடிப்படையான கேள்விதான். அது மனதில் எழுந்ததும் நாவலின் களம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவேன்.
கதை ,நாவல் எழுதிய அனுப்பவும்?
‘விஷ்ணுபுரம்’ நாவலுக்கு ஏழு ஆண்டுகால ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெண்முரசு நாவல் தான் நான் திட்டமிடத் தொடங்கியது 1990இல். 2014இல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகே எழுத ஆரம்பித்தேன். நடுவே பல நூறு நூல்களை வாசித்தேன். ஏராளமாகப் பயணம் செய்தேன். குறிப்புகள் மட்டும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் கையில் இருந்தன. ஆனால் இந்த திட்டமிடல் எல்லாமே நாவலின் வடிவம் கட்டமைப்பு சார்ந்தவை மட்டுமே. நாவலை உணர்ச்சிகளும் சரி கதாபாத்திரங்களும் சரி சித்தரிப்பும் சரி எழுத எழுத உருவாகி வருபவை மட்டுமே.
பொதுவாக ஒரே ஸ்ட்ரோக்கில் அல்லது மூச்சில் ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி விடுவீர்களா? இல்லை திருத்தங்கள் மேற்கொள்வீர்களா?
தொடர்ந்து படிக்க
முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான் ! | எழுத்தாளர் ஜெயமோகன்
Leave a comment