ho Open Discussions சுஜாதா, படித்தவுடன் புன்னகை, யோசித்தவுடன் அதிர்ச்சி
Open Discussions

சுஜாதா, படித்தவுடன் புன்னகை, யோசித்தவுடன் அதிர்ச்சி

பிப் 27 சுஜாதா நினைவுநாளில், அவரின் எழுத்து எதனால் இன்னும் புதியதாகத் தோன்றுகிறது என்பதற்கான சில மறக்கமுடியாத வரிகள்.

Share
Share

பிப் 27. சுஜாதா நினைவுதினம். எந்த வடிவமானாலும் சுவாரஸ்யம் குன்றாமல் சொல்வதற்கான இலக்கணத்தை அவர் எழுத்துகள் கொண்டிருந்தன. சில உதாரணங்கள், கீழே:

எழுத்தாளன் ஆவதற்கு மைலாப்பூர் போவதற்கு உள்ளதைப் போல திட்டவட்டமான, விவரிக்கக்கூடிய வழி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
(என் முதல் கதை, கட்டுரை)
“தேங்க்யூ! உங்களை ஒரு ரேம்ப்வாக்ல பார்த்திருக்கேன்” என்றான் வசந்த். அவள் ஒரு ‘உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்’ புன்னகை செய்தாள்.
(சில்வியா, குறுநாவல்)
“மறதிக்கு லேகியம் என்று விற்கிறார்களே, இதனால் பயன் ஏதும் உளதா?”
“உள்ளது. லேகியம் விற்பவர்களுக்கு!”
(தலைமைச்செயலகம், மூளை குறித்த தொடர்)
தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டாள். எளிய ஸாரி அணிந்திருந்தாள். கழுத்தில், காதில் நகைகள் இல்லை. திருவள்ளுவரின் ‘மனைமாட்சி’ என்கிற அத்தியாயத்திலிருந்து நேரே நடந்து வந்தவள் போலிருந்தாள்.
(மாயா – குறுநாவல்)
“சில சமயம் பூஜை செய்யும்போது உடல் பஞ்சுபோல் ஆகி, எங்கோ பறப்பது போல உணர்கிறேன். சில விநாடிகள் மட்டுமே இந்த நிலை நீடிக்கிறது. இது எதனால்?”
“பசியால்”
(தலைமைச்செயலகம், மூளை குறித்த தொடர்)
கணேஷ்: “டாக்டர் சரஸ்வதியிடம் அதற்குமுன் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா?”
மாயா: “சென்றிருக்கலாம்…”
கணேஷ்: “எதற்கு?”
மாயா: “ஒரு டாக்டரிடம் எதற்குப் போவார்கள்?”
கணேஷ்: “என் கேள்விக்கு பதில் தேவை. எதற்கு?”
மாயா: “ஜலதோஷம்… இருமல்! சரிதானே?”
கணேஷ்: “டாக்டர் சரஸ்வதி ஒரு கைனகாலஜிஸ்ட். அவரிடம் ஜலதோஷத்திற்கும் இருமலுக்கும் போவார்களா? எந்த இடத்தில் இருமல்?”
(மாயா – குறுநாவல்)
அவன் நிஜப்பெயர் நாராயணன் இல்லை. அதைப்பற்றி அப்புறம் சொல்லலாம். இப்போது அவன் நாராயணன்.
(‘என்றாவது ஒரு நாள்’ நாவலின் ஆரம்ப வரிகள்)
“தமிழ்ப் பத்திரிகைகளில் குழந்தைகள் படிக்கக்கூடாத கதைகள் வருகின்றனவே?”
“அவற்றைக் குழந்தைகளைப் படிக்க விடாதீர்கள்.”
(சேலத்தில் வாசகர்கள் கலந்துரையாடலின்போது – விவாதங்கள் விமர்சனங்கள்)
சென்ற இதழின் இந்தப் பக்கம் சில கோபமான கடிதங்களைக் கிளப்பியிருக்கிறது என அறிந்துகொண்டேன். அவைகளை நான் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு மன்னிக்கிறேன்.
(கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – மே 1973)
சுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் உலகம். ‘உங்களுக்கு சோர்வாக இருக்கிறதா?’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம்.
(வீணா, சிறுகதை 1968)
“டென்னிஸில் பெண்கள் குட்டைப்பாவாடை அணிந்து விளையாடுவது ஏன்?”
“ஆட்டத்தைவிட அதில் உங்களைப் போன்ற ரசிகர்கள் கவனித்துக் கேள்வி கேட்பதற்கும், ஜூ.வி. அதற்குத் தகுந்தாற்போல் ‘டக்கராக’ ஒரு படம் வைப்பதற்கும்தான்.”
(ஏன் எதற்கு எப்படி II, ஜுனியர் விகடன்)
ராமதுரை அபிராமி அந்தாதியின் ‘நூல் பய’னில் தேடித்தேடிப் பார்த்தார். பிரிந்தவர் ஒன்றுசேர, நல்வித்தையும் ஞானமும் பெற, அகால மரணமும், துர்மரணமும் உண்டாகாதிருக்க என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலைகிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை.
அபிராமி பட்டர் காலத்தில் வேலை கிடைப்பது அத்தனை கஷ்டமில்லை போலும் என்று எண்ணினார்.
(அனுமதி, சிறுகதை)
(முதலிரவு. மனைவி – அவள் பெயர் வேணி – கேட்கிறாள்)
“உங்களுக்குப் பிடிச்ச புத்தகம் எது?”
“வேணி”
“படிங்க”
முதலில் அட்டைப்படத்தைப் பிரித்தான். பார்த்தான். பொருளடக்கத்தைத் தேடினான். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான். ஓவியங்களை ரசித்தான். கவிதைகளைத் தொட்டான். வார்த்தைகள்… இடைவெளிகள்…இடைச்செருகல்கள்…
(மனைவி கிடைத்துவிட்டாள், சிறுகதை)
ரெக்ஸ் தியேட்டர் சிறுநீர் பீங்கானின் மேல் சுவரில் நான் ரசித்த முத்து:
“இந்தியாவின் எதிர்காலம் இப்போது உங்கள் கையில்!”
(சின்னச் சின்ன கட்டுரைகள், குங்குமம்)
“How about a Coffee?”
“எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு!”
“Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee. Whats the problem?”
(ஆய்த எழுத்து படத்தில்)
“உங்க பேரு?” என்றான் வசந்த்.
“கயல்”
“மொத்தப்பேரே அவ்வளவுதானா.. இல்லை, கண்ணுக்கு மட்டுமா?”
(இது எதில் வருகிறது என்று வாசகர்கள் சொல்லலாம். நான் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேன்!)
 
 
மேலே உள்ள புகைப்படம், ஒன்பது வருடங்களுக்கு முன் அவரது இல்லத்துக்குச் சென்றபோது எடுத்தது. “இங்கதான் ஒக்காந்து எழுதிண்டிருப்பார்” என்று என்னிடம் சொன்னார் சுஜாதா.
Parisal Krishna
3
Review Overview
Summary

Vestibulum viverra gravida fringilla. Suspendisse accumsan purus quis augue lobortis quis sagittis

The Pros
Colors Size Style
The Cons
Expensive Duration quality
  • Design2
  • Speed2.5
  • Saving4.5
  • Features3
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
Open Discussions

நீதிபதி ஹேமா குழு அறிக்கை

கேரள சினிமாக்களையும் அதன் நுட்பங்களையும் பார்த்து ஆஹா! ஓஹோ! என வாயைப்பிளந்து வியக்கும் அதே நேரத்தில்.....

Open Discussions

பெழச்சான் | நாவல் | பாலைவன லாந்தர் | எதிர் வெளியீடு – Parisal Krishna

மொழி, காலம், நிலப்பரப்பு, மற்றும் எளிய மக்களின் தரப்பை இணைத்து விரியும் ஒரு பெரும் கதைச்சூழல்.