ho Open Discussions பெழச்சான் | நாவல் | பாலைவன லாந்தர் | எதிர் வெளியீடு – Parisal Krishna
Open Discussions

பெழச்சான் | நாவல் | பாலைவன லாந்தர் | எதிர் வெளியீடு – Parisal Krishna

மொழி, காலம், நிலப்பரப்பு, மற்றும் எளிய மக்களின் தரப்பை இணைத்து விரியும் ஒரு பெரும் கதைச்சூழல்.

Share
Share

பிழைத்தவன், போராடியவன், ஆட்சி செய்தவன் — பெழச்சான்

தெற்குப்புரம், சென்னை, பரியூர் என்று மூன்று நிலங்கள், பெழச்சான், அற்புதன், கந்தன் (இங்கேயும் பெழச்சான் வருகிறான்) என்று கதாபாத்திரங்கள் & அவர்களின் துணை கதாபாத்திரங்கள், நாமே உருவகித்துக்கொள்ள வெவ்வேறு காலக்கட்டங்கள் என்று இவற்றை – பந்துகளை கையில் வைத்துக்கொண்டு ஆடும் juggling போல – விளையாடவிட்டு நல்லதொரு வாசிப்பனுபவம் கொடுத்துள்ளார் நாவலாசிரியர்.
 
தெற்குப்புரத்தில் அடிமை வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பொக்கியின் மனைவிக்கு பனிக்குடம் உடைந்துவிட, அவளை உதைத்து கொல்லைப்புரத்தில் தள்ளுகிறாள் ஆண்டையின் மனைவி. உயிர் போகும் தருவாயில் பிறந்த மகனுக்குப் பெழச்சான் என்று பெயரிடுகிறார்கள். ஊரில் நடக்கும் காளி பூசையில் செய்த ஒரு செயலுக்காக, சிறுவனான பெழச்சானை அடித்துத் துவைத்து, அவன் உயிரிழந்துவிட்டதாகக் கருதி – குடும்பத்தோடு துரத்துகிறார்கள் ஆண்டைகள். அப்போதும் பிழைத்துக்கொள்கிறான் பெழைச்சான்.
 
பொக்கி குடும்பம் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு தெற்குப்புரத்துக்கு வர, ஊரே காலியாகி இருக்கிறது. இப்போது தெற்குப்புரத்தை ஆள்பவனாக மாறுகிறான் பெழச்சான்.
 
இந்தப் பெழச்சானுக்கும், சென்னையில் மீன்பிடி குடும்பத்தில் இருக்கும் அற்புதனுக்கும் என்ன தொடர்பு, பெழச்சான் தெற்குப்புரத்தில் இருந்து பரியூர் எனும் சிற்றரசை ஆள்பவனாய் வந்தது எப்படி என்றெல்லாம் விவரிக்கிறது பெழச்சான் நாவல்.
 
மூன்று நிலப்பரப்புக்குமான மொழி, அதற்கேற்ற கதாபாத்திரங்கள், காலகட்டங்களின் வேறுபாடு காட்டும் விவரணைகள் என்று பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தக் காலமானாலும், எழுத்து எளிய மக்களின் தரப்பையே பேசுகிறது என்பதே நாவலின் சிறப்பாக இருக்கிறது.
 
நாட்டுப்புறப்பாடல்கள் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருந்தன; கருப்பி – சித்திரையன், பச்சை இவர்களின் கதை இன்னும் விரிவாகப் பேசப்பட்டிருக்கலாம் போன்ற சிறு விமர்சனங்கள் என்னளவில் உண்டு. குருவி – கருப்பி – சித்திரையன் பகுதி, நிச்சயம் இதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலாகவோ குறுநாவலாகவோ வரத்தகுந்த களம்.
 
Fantasy-யான (அல்லது தொன்மம் எனவும் சொல்லலாம்) ஒரு இடம் வருகிறது நாவலில். பரபரவென்ற அந்தக் காட்சியும், அந்தக் காட்சிக்குப் பின்னான பாகங்களும் நல்ல திரைக்கதையாக்ககூடிய அம்சமாக இருந்தது. அதன்பின் நமக்கே நாவல் வேறொரு கோணத்தில் விரிகிறது.
எழுத்தில் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறார். ‘பொக்கியின் உலகம் மிகச்சிறியது. அது ஆண்டையின் வலது பாதத்தில் தொடங்கி, இடது பாதத்தோடு முடிந்து போகும்’ ஓர் உதாரணம். உடலைப் புதைக்க வெட்டப்பட்ட குழிக்குள்ளேயே குடும்பம் வாழ நேர்வது, பட்டுக்கனி லைலா மீது காட்டும் கோபத்துக்கான காரணம், காட்டைக் கற்கும், பொழச்சான் தங்கை குருவியின் சாமர்த்தியம், கந்தனைக் காக்கும் பெழச்சானின் வீரம், பச்சையைக் காப்பாற்றும் குதிரை, லூகாஸ் – குருவி காதல் போன்ற பல இடங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
 
எல்லாவற்றையும்விட, நாவலாசிரியரின் முன்னுரை மிக நேர்த்தியான ஒன்று. அதில் கத்தியை உருவகமாக வைத்து அவர் எழுதிய ஒரு பத்தியைப் படித்துமுடித்து, ஒருநாள் கழித்துத்தான் நூலைத் தொடர்ந்தேன். அத்தனை பாதிப்பைக்கொடுத்தது அந்த முன்னுரை.
முதல் நாவலுக்கு வாழ்த்துகள்!
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
Open Discussions

நீதிபதி ஹேமா குழு அறிக்கை

கேரள சினிமாக்களையும் அதன் நுட்பங்களையும் பார்த்து ஆஹா! ஓஹோ! என வாயைப்பிளந்து வியக்கும் அதே நேரத்தில்.....

6
Open Discussions

சுஜாதா, படித்தவுடன் புன்னகை, யோசித்தவுடன் அதிர்ச்சி

பிப் 27 சுஜாதா நினைவுநாளில், அவரின் எழுத்து எதனால் இன்னும் புதியதாகத் தோன்றுகிறது என்பதற்கான சில...