ho Book Reviews மலாவியிலிருந்து திறந்த தத்துவக் கதவுகள் — ஒரு எதிர்பாராத பொக்கிஷ வாசிப்பு அனுபவம்
Book Reviews

மலாவியிலிருந்து திறந்த தத்துவக் கதவுகள் — ஒரு எதிர்பாராத பொக்கிஷ வாசிப்பு அனுபவம்

Share
Share

பார்ட்னருடனான பல வேலைகளுக்கு நடுவில்.. அராத்துவின் புருஷன் நாவலை படித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அப்படியே வேறு ஏதோ ஒன்றை தேடி படிக்கப் போக… சாரு நிவேதிதாவின் ‘மலாவி என்றொரு தேசம்’ என்ற புத்தகத்தை கிண்டிலில் ஏதேச்சையாக புரட்டினேன்.

புரட்டலாம் என்றே தொடங்கினேன்.. ஆனால் தொடர்ந்து படிக்கும்படி புத்தகம் அப்படியே என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.

Malawi LitBanters

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சாருவுக்கு எழுதிய கடிதங்களும், அவருக்கு சாரு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

மலாவி மக்களின் தினசரி வாழ்க்கை, உளவியல், குழந்தை வளர்ப்பு, நடனம், இலக்கியம், மொழி, பொருளாதாரம், உணவு, போதை, தொழில், நோய்கள், காவல்துறை, சிறை, வங்கிகள், முதலாளி, தொழிலாளி, ஒடுக்குமுறை, லஞ்சம் என கிட்டத்தட்ட மலாவி நாட்டின் ஒரு என்ஸைக்ளோபீடியாவாகவே இந்தப் புத்தகம் திகழ்கிறது. அதோடு மலாவியில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மற்றும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களின் வாழ்வு பற்றிய அரிய செய்திகளை இந்த புத்தகம் ஆழமாகச் சொல்கிறது. மலாவியை நேரில் பார்ப்பது போன்ற அனுபவம் உண்டாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர்.. என்னடா வாழ்க்கை இது? என்ன டிசைன் டா இது? என்ற விரக்தி முட்ட… திடீரென எனக்கு தத்துவங்களின் மேல் ஆர்வம் வந்து.. இங்கே பெரிய தத்துவவாதிகளாக சொல்லப்படும் ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ மற்றும் யூஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் புத்தகங்களை கொஞ்சம் படித்தேன்.

அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சித்து பலமுறை மண்டையை உடைத்துக்கொண்டு தோற்றிருக்கிறேன். படித்துக்கொண்டே செல்லும்போது புரிவதுபோல ஒரு வரி வரும்.. ஆனால் கடைசியில் புரியாது. உச்சத்தை நெருங்கும்போது யாரோ கையை தட்டிவிட்டதுபோல இந்த தத்துவ விவரணைகள் இருந்தால் இதையெல்லாம் எப்படிப் படிப்பது? அதுவும் என் மண்டைக்கு எதுவுமே எளிதில் புரியாது. கொஞ்சம் நேரம் பிடிக்கும். விரக்தியில் அவைகளை அப்படியே விட்டுவிட்டேன்.

சரி.. இதற்கும் ஆப்பிரிக்க நாட்டைப் பற்றிய ‘மலாவி என்றொரு தேசம்’ என்ற புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம்?

மலாவி பற்றித்தான் படிக்கப் போகிறோம் என்று நினைக்கையில்… மேலே சொன்ன மூன்று தத்துவாதிகள் பற்றியும் சாரு எழுதிய சில முக்கியமான பகுதிகள் இந்த புத்தகத்தில் இருப்பது பெரிய தத்துவ அலசலாக இருந்தது.

Intellectual prostitutes என்ற பகுதியில்… ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ மற்றும் யூஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தத்துவப் பார்வையை போகிற போக்கில் அற்புதமாக விளக்கிவிடுகிறார் சாரு. இந்த புத்தகத்தை முன்பே ஏன் படிக்கவில்லை என்று பிறகு வருத்தப்பட்டேன். எங்கெங்கோ தேடி படிக்க முயற்சித்தவைகள் எல்லாவற்றையும் இங்கே சாரு சில பக்கங்களில் எளிமையாக புரியுமாறு சொல்கிறார். இப்போது அந்த மூவரின் தத்துவ புத்தங்களையெல்லாம் எடுத்துப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. எடுத்து படிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. சாருவின் விளக்கங்கள் அப்படி!

முன்பு, ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களை நான் கொஞ்சம் படிக்க முயற்சி செய்திருக்கிறேன். அவர் விளக்கங்கள் எல்லாமே கிட்டத்தட்ட தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாகத்தான் எனக்குத் தோன்றியது. ஆனால் சாரு சுற்றி வளைக்காமல்.. தெளிவாக.. இந்த மூவரும் என்ன சொல்ல வருகிறார்கள்? அந்த மூவருக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன? உண்மையில் இவர்களின் தத்துவங்கள் நமக்குத் தேவைதானா? இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் தத்துவங்கள்படி உண்மையில் அவர்கள் வாழ்ந்தார்களா? என்பதையெல்லாம் எளிமையாக அவருக்கே உரிய தொனியில் விளக்குகிறார். அதோடு, யூஜி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையையும் அவரின் பார்வையையும் விரிவாக எழுதியிருக்கிறார்.

ஆனந்த், அவர் பார்வையில் இம்மூவர் பற்றி முன்வைக்கும் விளக்கங்களும் அற்புதமாக இருக்கிறது. சிலவற்றை ஏற்றுக்கொள்ளவும் சிலவற்றை மீண்டும் வாசித்து சிந்தனைக்கு உட்படுத்தவும் தூண்டுபவை. நல்லதொரு தத்துவ அலசலாக, ஒரு comparative study போல இது அமைகிறது.

குறிப்பாக, ஜே கிருஷ்ணமூர்த்தியின் மூன்று வகையான ஆர்வலர்கள் பற்றி ஆனந்த் சொல்லும் விளக்கங்கள் அபூர்வமாக இருக்கிறது. இதையெல்லாம் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்ற திறப்பு கிடைத்தது.

மலாவியில் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போகிறார் ஆனந்த். கலைஞர்களின் நடனத்தை அவர்களின் அசைவுகளோடு அப்படியே விவரிக்கிறார். அதை வாசிக்கையில் நாமே நேரில் அந்த நடன நிகழ்ச்சியை பார்ப்பது போல இருக்கிறது. நம்மையே நாம் மறந்துவிடும் அளவிற்கு அந்த நடனம் இருந்தது என்கிறார். பிறகு இப்படிச் சொல்கிறார். ‘கிட்டத்தட்ட, இருநூறு பார்வையாளர்களைக் கொண்ட அந்த அரங்கில் நானும் ஓம்பால் சிங்கும் மட்டுமே இந்தியர்கள்’. இந்தியர்களின் கலை ஆர்வம் மற்றும் அதன் வறட்சி குறித்த காரணங்களை தன் பார்வையில் விரிவாக அலசி முன்வைக்கிறார்.

எதையோ தேடிப்போக ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல ஆகிவிட்டது எனக்கு!

என் போன்றவர்கள் புத்தக வாசிப்பினுள் வராமல் இருந்ததற்கான முக்கியமான அடிப்படைக் காரணங்களும், அதற்கான சமூகப் பின்புலங்களும் கூட இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதையெல்லாம் என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. என்னையே நான் புதிதாக கண்டு கொண்டது போல இருக்கிறது.

உண்மையில் இப்போதெல்லாம் புத்தகம் வாசிக்காதவர்களைக் கண்டால் எனக்கு பரிதாபமாகவும் வேதனையாகவும்தான் இருக்கிறது. எத்தனை அரிய பொக்கிஷங்களை இவர்கள் தவற விடுகிறார்கள். எல்லாப் புத்தகங்களுமே ஏதோ ஒருவகையில் மாபெரும் திறப்புகளாக அமையும் பொக்கிஷங்கள்தான்! முக்கியமாக சாருவின் புத்தகங்கள் எல்லாமே என் மனதிற்கு நெருக்கமான பொக்கிஷங்கள்!!!

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
லிட்பேன்டர்ஸ்
Book Reviews

LITBANTERS – WHAT’S HERE – DOs and DONTS

The Litbanters Review - ssays. Arguments. Aesthetic Depth. கட்டுரைகள். கருத்துகள். அழகியல் ஆழம்.

Book Reviews

ஏன் வாசிக்க வேண்டும்? – ஆர். அபிலாஷ்

2011ல் அமெரிக்காவில் ஒரு சொகுசுக்கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தேன். கப்பல் நடுக்கடலில் நின்றுவிட்டால் இறங்கித் தள்ள.. இல்லை!...

Book Reviews

கண்றாவி கூத்த ரென்றாத்திரி பார்த்தானாம்…

பாப்புலர் ஃபிக்‌ஷன், ‘சீரியஸ்’ இலக்கியம், மற்றும் தாழ்வு மனப்பான்மையின் அரசியல்