2011ல் அமெரிக்காவில் ஒரு சொகுசுக்கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தேன். கப்பல் நடுக்கடலில் நின்றுவிட்டால் இறங்கித் தள்ள.. இல்லை! அதைவிட கொடுமையான photography வேலை. சொகுசுக்கப்பலில் வந்துபோகும் பயணிகளை படம்பிடித்து அந்தப்படங்களை அவர்களிடம் விற்க வேண்டும். Photography and Sales. தினமும் பத்து மணிநேர வேலை. கால்கடுக்க நின்று கப்பல் விருந்தாளிகளை படமெடுக்க வேண்டும்.
என்னுடன் கப்பலில் ஒரு செர்பியா நாட்டுக்காரர் வேலை செய்தார். என் அறைக்கு பக்கத்து அறையில் அவர் இருந்தார். அவரும் புகைப்படம் எடுப்பவர்தான். எங்கள் குழுதான். வேலை நேரம் தவிற மற்ற எல்லா நேரங்களிலும் அவர் கையில் ஏதாவதொரு புத்தகம் இருக்கும். படித்துக்கொண்டே இருப்பார். பத்து மணி நேர வேலைக்கு கிடைப்பதோ 4-5 மணி நேர ஓய்வு மட்டுமே. அதில்தான் தூங்க வேண்டும், துணிகளை துவைக்க வேண்டும், அதை இஸ்திரி போடவேண்டும். வேலையில் டிப் டாப்பாக இருக்க வேண்டும். முக்கயமாக தாடி மீசையை தினமுமே மழிக்கவேண்டும்.
ஆனால் அவரோ சின்ன இடைவேளை கிடைத்தாலும் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். எந்நேரமும் புத்தகமே கதி. அதுவே உலகம். அதிகம் பேசமாட்டார். சாப்பிடும்போது கூட புத்தகம்தான். கழிவறையில் நான் சென்று பார்க்க முடியாது. அதனால் அங்கு என்ன நிலைமை என தெரியவில்லை. என்னடா இந்த மனிதர் இப்படி காட்டுத்தனமாக படிக்கிறார். ஏதாவது பரீட்சைக்கு தயார் ஆகிறாரோ? கப்பலில் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு கப்பலுக்கே முதலாளி ஆகப் பார்க்கிறாரோ? என நினைப்பேன்.
பிறகுதான் தெரிந்தது அவர் படிப்பதெல்லாம் ஆங்கில நாவல்கள். நான் அதிர்ந்து போனேன். பல மணிநேரம் உழைத்துவிட்டு கொஞ்சம் இளைப்பாற எல்லோரும் மது அருந்த பாருக்கு செல்வார்கள். அங்கேயும் அவர் ஒரு மூலையில் ஒரு கையில் மதுவையும் இன்னொரு கையில் புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார். பாரில் பொழுதுபோக்க பல விளையாட்டுக்கள் இருக்கும். நாங்கள் அவரை விளையாட அழைப்போம். ‘No thanks’ என்று சொல்லிவிட்டு புத்தகத்துக்குள் ஆழ்ந்துவிடுவார். என்னடா இந்த மனிதர் ஒரு கதைப்புத்தகத்திற்கு இப்படி அடிமையாகிக் கிடக்கிறாரே. அப்படி அதில் என்னதான் இருக்கிறது?

எனக்கு அப்போது புத்தகம் வாசிக்கும் பழக்கமெல்லாம் சுத்தமாக கிடையாது. நாளிதழைக்கூட நான் தொடுவதில்லை. எங்கள் வீட்டில் தேவார திருவாசக புத்தகங்கள்தான் அதிகம். கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனபின் அதையும் படிப்பதில்லை. கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் முதலில் நான் என் தலையை சுற்றி தூக்கிப் எறிந்தவை புத்தகங்களே. புத்தகங்களை கண்டாலே எனக்கு வெறுப்புதான் வரும்.
எனக்கு அந்த செர்பியாகாரர் மேல் ஒரு வெறுப்பு வந்தது. எதிலும் பங்கேற்க மாட்டார். தனிமையிலேயே இருப்பார். வேலை பளுவால் நாங்கள் சோர்ந்துபோய் கிடப்போம். அவர் எந்தவித அலுப்பும் இல்லாமல் காலை நீட்டிக்கொண்டு வசதியாக புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். அந்த வெறுப்பு கொஞ்ச நாளில் பொறாமையானது. அவரை அணுகி பேச நினைப்பேன். பயமாக இருக்கும். ‘அமெரிக்காவில் ஒரு சொகுசு கப்பலில் புத்தகத்தால் அடித்து இந்திய வாலிபர் கொலை’ என செய்தி வந்தால் கேட்க நன்றாகவா இருக்கிறது? அவரை சுடுமூஞ்சிக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் சுடுமூஞ்சிக்கு கொஞ்சம் பக்கத்தில் இருப்பவர்தான். செர்பியா கலாச்சாரத்தில் அவர் சுடுமூஞ்சாக இல்லாமல் கூட இருக்கலாம். யார் கண்டார்.
கப்பல் வாழ்வு முடிந்த பிறகு என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ அழைக்க அங்கெல்லாம் நான் சென்றேன். செர்பியாகாரரை மறந்துபோனேன். புத்தகங்களும் என் அருகில் வரவில்லை. நானும் அதனருகில் செல்லவில்லை. பிறகு சினிமாவில் அதிகம் மூழ்கிப்போனேன். அதுவே கதி என்றிருந்தேன்.
2020 வாக்கில் தான் நான் புத்தகங்களை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஏதோ ஒரு புரியாத தேவைக்காக. ஒரு வெற்றிடத்தை நிரப்ப. அதற்கு புத்தகங்கள் உதவுமோ என முயற்சி செய்து பார்த்தேன். உண்மையில் கொஞ்சம் இதமாகவே இருந்தது. ஆனால், எதை வாசிப்பது எப்படி வாசிப்பது, புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. அதுவே பின்னால் ஒரு பிரச்சனையானது. எதை வாசித்தாலும் ஒரு ஒவ்வாமை இருக்கும். வாசிக்காமல் இருந்தால் வெற்றிடம் துன்புறுத்தும். இப்படியே.. எனக்கென்று ஒரு தேடல் இல்லாமல் யாராவது எதையாவது பரிந்துரைத்தால் மட்டுமே வாசிப்பேன். வாசிப்பேனே ஒழிய அதில் ஆழம் இருக்காது. மேலோட்டமாக வாசிப்பதுதான் வழக்கம். இன்றுவரை அப்படித்தான்.
“ஏன் வாசிக்க வேண்டும்” என்ற ஆர். அபிலாஷின் இந்த புத்தகம் உண்மையில் என் போன்றவர்களுக்கு வாசிப்பினுள் செல்ல ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு ஏன் வாசிப்பு பழக்கம் ஏற்படவில்லை, ஏன் வாசிப்பை கண்டு நான் பயந்தேன் என்பனவற்றுக்கெல்லாம் இதில் பதில்கள் கிடைத்தன. பல தளங்களில், பன்முகப்பார்வை கொண்டு பல செய்திகள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் எனக்கு முற்றிலும் புதியது. ஏனோதானோ என்று வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இது ஒரு திறப்பு எனலாம். அந்த செர்பியாகாரரின் புத்தக போதையையும் இப்போது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.
வாசிப்பு, வாசகன், வாசிப்பு சூழல், வாசிப்பதால் என்ன நடக்கும், என்ன நடக்காது, அதிகம் வாசிப்பதால் நிகழும் பாதிப்புகள், வாசிப்பு ஆலோசனைகள், வாசிப்பெனும் போதை, வாசிக்கத்தான் வேண்டுமா? கழிவறையில் புத்தகம் வாசிப்பது, புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுப்பது, என பல கேள்விகளுக்கு இதில் விடைகள் இருக்கின்றன.
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024The Litbanters Review - ssays. Arguments. Aesthetic Depth. கட்டுரைகள். கருத்துகள். அழகியல் ஆழம்.
BySriram ஸ்ரீராம் சோமசுந்தரம்February 23, 2026பார்ட்னருடனான பல வேலைகளுக்கு நடுவில்.. அராத்துவின் புருஷன் நாவலை படித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அப்படியே வேறு ஏதோ...
ByOLI MURUGAVELFebruary 22, 2026Raasa Leela, Charu Nivedita
BySriram ஸ்ரீராம் சோமசுந்தரம்June 5, 2024பாப்புலர் ஃபிக்ஷன், ‘சீரியஸ்’ இலக்கியம், மற்றும் தாழ்வு மனப்பான்மையின் அரசியல்
Bygsplselva@gmail.comMay 26, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment