மேகம் மறைத்த தாரகை: ரித்விக் கட்டக்
தாதா – எஸ்.வாசுதேவன்.

இந்த நூல் முன்னுரையையும், நூலுக்கான உசாத்துணைகளையும் மற்றும் ரித்விக் கட்டக் திரைப்படங்களின் விவரங்களோடு சேர்த்து 9 பகுதிகள் இருக்கிறது.
முதல் இரண்டு பகுதிகள்.
ஒரு கலைஞன் தன் படைப்பிற்கான உந்துதலை அவனை பாதித்த இருப்பின் சிக்கல்களை கொண்டே படைக்கிறான். அது அவன் நேரடியாக எதிர்கொண்ட கடந்தகாலமாகவோ, ஏதும் செய்ய இயலாத நிகழ்கால சமூக அமைப்பு குறித்த இயலாமையின் வெளிப்பாடகவோ இருக்கக்கூடும்.
“என் மக்களின் துயரங்களையும், அல்லல்களையும் பார்த்து என் கோபத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்த சினிமா என்ற கலை வடிவத்தைத் தேர்வு செய்தேன்” என்று சொல்லும் ரித்விக் கட்டக் வாழ்வு மற்றும் அவரது திரைப்படங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள அவரை அதிகம் பாதித்த, மற்றும் அவரது படங்களில் அதிகம் வெளிப்பட்ட வங்காள பஞ்சம், வங்காளப் பிரிவினையை பற்றிய விவரணைகள் தான் முதல் இரண்டு பகுதிகள்.
வங்காள பஞ்சம் (1943)
வாங்கள பஞ்சத்தை முதல் இரண்டு பஞ்சங்களை கட்டக் தான் வாசித்த நூல்களை வைத்து புரிந்துக்கொண்டிருப்பார். உணவு பயிர்களுக்கு பதில் பணப்பயிர்களை பயிரிட கம்பெனி ஆட்சி ஊக்குவித்தது, இரண்டாவது பஞ்சம் பருவமழை இல்லாமல் போனதால் ஏற்பட்டது. ஆனால் பர்மாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் மூலமாக இரண்டாவது பஞ்சத்தை வெற்றிகரமாக கையாண்டது அப்போதைய ஆட்சி. மூன்றாவது, போர் மற்றும் விலையேற்றத்தால் உருவான செயற்கை பஞ்சத்தை பற்றி அப்போது ஆட்சியில் இருந்த சர்ச்சிலின் வெறுப்பு பேச்சை நாம் நிறைய இடங்களில் வாசித்திருக்கிறோம். ஆனால் அப்போது வெளிவந்த இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இரண்டும் பஞ்சம் குறித்த செய்திகளை எப்படி வெளிப்படுத்தியது என்றும் அதில் ஒன்றான அம்ரிதா பஸார் பத்ரிகா வாயிலாக எப்படி உலகின் கவனத்திற்கு பஞ்சத்தை கொண்டு வந்தது என்று விவரிப்பது நாம் அறியாத ஒன்று. மதுஸ்ரீ முகர்ஜி என்ற ஆய்வாளர் இந்த செயற்கை பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இணையானது என்கிறார். அதற்கு மன்னிப்பு இதுவரை கேட்கவில்லை. வாசுதேவன் அவர்கள் மிக முக்கிய தரவுகளை நம் முன் வைக்கிறார். இந்த தரவுகள் வாசிக்கும் நமக்கு ஏற்படும் அதிர்ச்சி, “என் இளம் பருவத்தில் பட்டினியின் பயங்கரத்தை நான் பார்த்தேன்” என குறிப்பிடும் ரித்விக் கட்டக் எதிர்கொண்ட 1943ல் ஏற்பட்ட இந்த பஞ்சம், பசியால் இறந்தவர்கள் குறித்த காட்சிகளும், அதிகம் இருப்பதன் பிண்ணனியை புரிந்துக்கொள்ள முடிகிறது.
வங்காளப் பிரிவினை (1947)
2013ல் ரித்விக் வாழ்வை தழுவி அவரது படத்தின் பெயரான மேக தக்க தாரா பெயரிலையே வெளிவந்த படத்தின் இறுதி காட்சியில், ரித்விக் கதாபாத்திரம் மனநல விடுதியில் இருக்கும் நபர்களை கொண்டே ஒரு நாடகத்தை இயக்கியிருப்பார். நாடகம் முடிந்தவுடன் அரங்கின் ஒரு கதவு திறக்கும்பொழுது ஒரு பெண் அகதி நின்று கொண்டிருப்பாள், “மீண்டும் நீ வந்துவிட்டாயா?” என அவளுடன் செல்ல தொடங்குவார், அதுவரை கறுப்பு வெள்ளையில் இருக்கும் திரைப்படம், அவளுடன் செல்ல செல்ல வண்ணத்திற்கு மாறும். அந்த காட்சியின் வாயிலாக நாம் கட்டக்கின் படங்களின் வங்காள பிரிவினை, அகதிகள் ஆதிக்கம் செலுத்தின என்பதை புரிந்துக்கொள்ள முடியும். வாசுதேவனின் இந்த பகுதியில் 1905 காலனிய ஆட்சியாளர்கள் பிரிக்க முடிவு செய்ய துவங்குவதிலிருந்து தொடங்கி, 46ல் நடந்த Direct action dayல் லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வீடு இழந்தார்கள். சுதந்திரத்திற்கு பின்பும் கிழக்கு மேற்கு வங்காளம் கொதிப்பிலிருந்ததை சுட்டி காட்டுகிறார்.
இந்த பகுதியில் அந்தோணி மஸ்கரென்ஹாஸின் Genocide என்ற இரண்டு பக்கச்செய்தியையின் பின்னணியே இந்திரா காந்தி அங்கு ராணுவத்தை அனுப்ப காரணம் என்பதை நூலில் அந்த செய்தியின் புகைப்படத்தோடு இணைத்திருக்கிறார்கள். வெறுமன திரைப்படங்கள் வாயிலாக மட்டுமே கட்டக்கை நமக்கு அறிமுக படுத்தாமல், வங்காளித்தின் பஞ்சம், பிரிவினால் ஏற்பட்ட மன உளைச்சலை புரிந்துக்கொள்ள வைப்பதில் வாசுதேவன் அவர்களுக்கு இருக்கும் பொறுப்பை மிகுந்த கவனத்துடன் சேகரித்திருக்கிறார். பிரெஞ்ச் இயக்குனர் கோடார்டை பாதித்த பாரீஸ் மாணவ போராட்டமும் வியட்நாம் போரும்போல கட்டக்கிற்க்கு வங்காள பிரிவினை என்பதை இந்த பகுதியின் உழைப்புதான், ரித்விக் குறித்த முழுச்சித்திரத்தை நமக்கு அளிக்கிறது.
இந்திய மக்கள் நாடக மன்றம் – IPTA. (1940 – 1950 )
இந்த பகுதியில் கட்டக்கிற்கும், கம்யூனிஸ் கட்சிக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளும், கலைக்கான மொழி வெறுமன கோஷமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததை குறிப்பிடுகிறார்.
‘நபானா’ (புதிய அறுவடை) என்ற பஞ்சம் குறித்த நாடகம் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இப்டாவில் இணைய வைக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தடைச்செய்யப்பட்ட பிறகு, அதன் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி, இப்டாவின் கருத்தியல் கொள்கைகளை வரையறுக்கிறார். அது On the cultural front. இந்த நூலை ஏழு முக்கிய சாராம்சமாக வாசுதேவன் சுருக்கமாக குறிப்பிடுவது, நூலை வாசிக்காதவர்களுக்கு உதவுகிறது.
அதில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கலை,இலக்கியத்தில் மேலதிக அக்கறை தேவை, பண்பாட்டுத்தளத்திலும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற கருத்துகள் கட்சியில் முரண்பாடு ஏற்பாட கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.
பண்பாட்டு தளத்திலும், கலை இலக்கியத்தளத்திலும் வேலை செய்யாத எந்த அமைப்பானாலும் மக்களிடையே சென்று சேராது என்பதை நாம் இந்த பகுதியில் புரிந்துகொள்கிறோம்.
எல்லைகளுக்கு அப்பால்…
முதல் மூன்று பகுதியில் நாம் படித்த விவரங்கள் இந்த பகுதியில் கட்டக்கின் அனைத்து திரைப்படங்கள் குறித்த மிக நுண்ணிய பார்வைகளை இந்த பகுதியில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என நாம் புரிந்து கொள்கிறோம் மேலும் அவரது படங்களில் இடம்பெறும் மரபின் ஆணிவேர் துர்கா தேவியின் தொன்மமும், மார்க்சிய இயங்கியலையும் இணைந்திருப்பது. திரைப்படங்களில் இடம்பெறும் இசைக்குறித்த தெளிவு, நியோ ரியலிச பாணி குறித்த தெளிவு, அந்த சமயத்தில் வெளியான உலக சினிமாக்கள் பற்றியும் வாசுதேவன் தனது பார்வைகளை முன் வைக்கிறார்.
இது நான் முந்தைய பதிவில் சொன்னது போன்ற ரித்விக் கட்டக் குறித்த A B C D போன்றது. சினிமாவை தன் துறையாக எடுத்து கொண்டிருப்பவர்கள், மற்றும் அதில் இடம் பெற விரும்புவர்கள் முக்கியமாக வாசிக்க வேண்டிய பகுதி.
நியோ ரியலிச சினிமா என்றால் என்ன? Pan shot, close-up போன்றவற்றை கட்டக் கையாளும் தன்மை. பாரி தேக்கே பாலியே திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு பெண்கள் குறித்த பிம்பங்கள் குறித்த விமர்சனம் என நீள்கிறது.
சத்யஜித் ரேவின் The apu trilogy நிறைய பேரை சென்றடைந்ததுபோல, கட்டக்கின் Partition trilogy அதிகம் சென்று சேர்ந்ததில்லை அதில் இடம் பெறும் படங்கள் மேக தக்க தாரா, கோமல் கந்தார், சுபர்ணரேகா.
இறுதிப்படத்தில் – யார் இந்தியர்? யார் பெங்காலி? யார் அகதி? இந்த சூழலுக்கு காரணமானது யார்? என அதற்கு அவர் கையாண்டிற்கும் Montage முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். இப்படி ஒரு கோணத்தில் நான் அந்த Montage காட்சிகளை பார்க்கவில்லை, மீண்டும் திரைப்படத்தை பார்க்க வேண்டும். இந்த மூன்று படங்கள் குறித்த அறிமுகங்கள் மட்டுமல்லாமல், வாசுதேவன் அவர்களின் பார்வையும் மிக முக்கியமானது. கட்டக் நூற்றாண்டிற்கு செலுத்தும் மரியாதை போல இந்த அத்தியாயம் அவரை கொண்டாட வைக்கிறது. ஆத்மநாம் கவிதையோடு இந்த பகுதியை நிறைவு செய்வதை குறிப்பிட்டாக வேண்டும், ஒவ்வொரு பகுதிக்கும் முக்கியமான மேற்கோளை கொடுத்திருப்பது எப்படி பொருத்தமானதாகவும், சிறப்பாகவும் இருந்ததோ அதை விட ரித்விக் கட்டக்கிற்கு இது மாபெரும் அஞ்சலி.
மேகம் கவிந்த தாரகை
இந்த பகுதி வரை கொண்டாடிய கட்டக்கைக்கு பின்னுள்ள அவரது மனைவி குறித்தது. துர்கா தேவியின் படிமத்தை தன் படங்களில் அதிகம் காட்டிய கட்டக்கிற்கு பின்னால் சுராமா என்றொரு மனைவி இருந்ததும் இறுதி வரை கட்டக்கின் தீவிர அரசியல் பார்வை, சில அங்கீகாரங்களை ஏற்க மறுத்ததால் ஏற்படும் சிக்கல்கள், கட்டக்கின் மனநலமில்லாத போது கொடுத்த சிகிச்சையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட இதுவரை நான் அறியாத அவரின் மனைவியை அறிமுகப்படுத்தியற்கு நன்றி வாசுதேவன்.
இந்த நூலை வாசிக்கும் வரை உண்மையில் ரித்விக் தான் மேகம் மறைத்த ஒரு தாரகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் நீங்கள் இந்த பகுதியின் இறுதியில் குறிப்பிட்ட சுராமாதாம் மேக தக்க தாராகை என்று முடித்திருப்பதில்
இது ரித்விக் கட்டக் குறித்த நூலா அல்லது அவர் பின்னால் நின்ற சுராமா குறித்த சித்திரத்தை அளிக்க ரித்விக் கட்டக்கை குறிதத்தா என்பதில் ஐயம் ஏற்படுகிறது.
நேர்காணல் ( மொழிப்பெயர்ப்பு )
இந்த பகுதியில் ஒரு கேள்வியையும் அதற்கு ரித்விக் கட்டக் அவருடைய பதிலை மட்டும் இணைக்கிறேன். ஒரு கலைஞன் அரசியலில் எவ்வளவு தீவிரமாக. ஈடுபட வேண்டும்?
ரித்விக் : இது கலைஞர்களுக்கான கேள்வி மட்டுமல்ல. இந்த வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் – ஒவ்வொரு தனி நபரும் அரசியலில் முழுமையாக ஈடுபட வேண்டும். கலைஞர்கள் மட்டுமல்ல, எல்லாரும். ஆனால் அதற்காக ஒரு கலைஞன் உரக்க கோஷம் எழுப்ப வேண்டும் என அர்த்தமல்ல. மலிவான கோஷம் எழுப்புகிறவன் கலைஞனாக இருக்க முடியாது. ஒரு கலைஞன் தன் நுண்புலன்கள் மற்றும் உணர்வுகளுக்குள் ஆழமாக பயணிக்க வேண்டும். கோஷங்கள், ஆரப்பாட்டங்கள் போன்ற மேலோட்டமான விஷயங்களில் அரசியல்வாதிகள் ஈடுபடுவார்கள். ஆனால் அதையே கலைஞர்கள் செய்ய தொடங்கினால், கலை காணாமல் போய்விடும்.
இறுதியாக வாசுதேவன் கட்டக்கின் இறுதிப்படத்தில் தன் சுயசரிதை அனுபவங்களை வெளிப்படுத்தினார் என்றும் அவரது இறுதிப்படத்தில் ஒவ்வொரு தருணத்திலும் தான் ஒரு மார்க்சியரா? சமூக அக்கறை கொண்ட மனிதனா? அல்லது கலைஞனா? என்று தனக்குள் கேட்டுக்கொண்டவர் என குறிப்பிட்டிருப்பார்.
அதை நாம் ரித்விக் கட்டக் போன்ற ஆளுமையை குறித்து நாம் புரிந்துகொள்ள விடைதேட (கவனிக்க விடைகளை குறிப்பிடுவது அல்ல) விடைதேட உதவும் ஒரு கையேடு.
நன்றி Vasu Devan மற்றும் சால்ட் பதிப்பகம்
கட்டுரையாளர்: நிஜந்தன் தோழன்
Leave a comment